தமிழ்நாடு (Tamil Nadu)

காலாண்டு விடுமுறை எதிரொலி- பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்

Published On 2024-09-29 07:07 GMT   |   Update On 2024-09-29 07:07 GMT
  • நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.

இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News