தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டியது- 50 வீடுகளில் வெள்ளம் புகுந்தது

Published On 2022-09-05 04:31 GMT   |   Update On 2022-09-05 04:31 GMT
  • ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது.
  • தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென இரவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.

ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது. தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவு 10 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது.

இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரிய வலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. மேலும் ஈரோடு சத்யா நகரில் கீழ்த்தளத்திலுள்ள 50 வீடுகளில் நள்ளிரவில் மழை நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் அதிகாலை வீடுகளில் புகுந்த மழைநீர் வடிந்தது. மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மடிக்காரர் காலனியில் வீதி 1, 2, 3, பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் மழை நீர் புகுந்தது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 3 மாதங்களில் இந்த பகுதிகளில் மட்டும் 5-வது முறையாக வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற சாக்கடை வசதிகள் இல்லை. வீடுகளில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விடுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதம்பாடி, குருவரெட்டியூர், சித்தார் போன்ற பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில் அம்மாபேட்டை காமராஜர் வீதியைச் சேர்ந்த சரசாள் (55) என்பவர் தனது மகள் ரத்னா (30) என்பவருடன் அதே பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தாய்- மகள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 9 மணி அளவில் திடீரென சரசாள் வீட்டை இடி தாக்கியது. இதில் வீடு முடிவதும் இடிந்து விழுந்தது.

நல்ல வேளையாக இடி சத்தம் கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருந்த சரசாள் மற்றும் அவரது மகள் ரத்னா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஒருசில இடங்களில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாக கடும் குளிரும் நிலவியது.

Tags:    

Similar News