கோவை- நீலகிரியில் கடும் பனி மூட்டம்: வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்கின்றன
- கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
- பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
கோவை:
கோவையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. ஒருசில இடங்களில் திடீர் மழையும் பெய்து வருகிறது. மேலும் வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுதவிர இரவு நேரங்களில் அதிகப்படியான குளிரும் நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக கோவையில் உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் ரோட்டில் எதிரே வருபவர் கூட சரியாக தெரியாத அளவுக்கு மூடுபனி கொட்டுகிறது. எனவே அந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அதிகாலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றன.
கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் எப்போதும் பனியின் தாக்கம் இருக்கும். தற்போது குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு நீர்த்திவலைகளுடன் கூடிய மூடுபனி காணப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக குவிந்துள்ள சுற்றுலாபயணிகள் நீலகிரி மாவட்டத்தின் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவித்து செல்கிறார்கள்.
எதிரில் வருபவர் கூட தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளதால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.