தமிழ்நாடு

பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்- கட்டணமின்றி வாகனங்கள் அனுமதி

Published On 2023-01-18 07:01 GMT   |   Update On 2023-01-18 07:01 GMT
  • சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

செங்கல்பட்டு:

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 5 லட்சம் பேர் வரை தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர்.

இதேபோல் சென்னையில் இருந்து ஆம்னி பஸ்கள் மூலமும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிட வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 16-ந் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் 15,619 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை நாள் என்பதால் நேற்று மாலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்னை நோக்கி திரும்பி வரத்தொடங்கினர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பஸ், கார்கள் சென்னை நோக்கி வரத்தொடங்கியதால் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேரம் செல்ல செல்ல சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் வரத் தொடங்கின.

சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து சுங்கக்கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன்பின்னர் போக்குவரத்து நெரிசல் மெல்ல மெல்ல சீரானது. தொடர்ந்து அதிகமான வாகனங்கள் சென்னை நகர் நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.பரத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

வெளியூர்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றன. ஆம்னி பஸ்கள் சில வண்டலூரிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அங்கிருந்து நகருக்கு மாற்று பஸ்சில் வர சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில இடங்களில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளில் பெரும்பாலானோர் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். இதைத்தொடர்ந்து பயணிகள் வசதிக்காக தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கூடுதலாக மநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்ட நெரிசலை தடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் அதிகப்படியான கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை அறிவுறுத்தலின் படி ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதலான சுங்க கட்டணம் வசூலிக்கின்ற மையங்கள் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் விரைவாக சென்றன. நேற்று மாலை 3 மணி முதல் வாகனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோயம்பேடு மார்கெட் அருகே உள்ள "ஏ" மற்றும் "சி" சாலை, காளியம்மன் கோவில் சாலை, மெட்டுக்குளம் சந்திப்பு, பள்ளிகூட தெரு சந்திப்பு, நூறடி சாலையில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் சந்திப்பு, பஸ் நிலைய நுழைவு வாயில் ஆகிய முக்கிய இடங்களில் 6 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸ்காரர்கள் என சுமார் 50 போக்குவரத்து போலீசார் அதிகாலை 4 மணி முதலே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பெரிதும் தவிர்க்கப்பட்டது.

மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் தங்களது பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டு செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News