ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயில் கதவை பூட்டி பொதுமக்கள் போராட்டம்
- கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.