மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம்- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி
- காங்கிரஸ் சார்பில் அதற்கான செலவுகளை ஏற்க தயாராக உள்ளோம்.
- மின்கட்டண உயர்வை மக்கள் தாங்கும் நிலையில் இல்லை.
நெல்லை:
நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றில் காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
உரிமைகளுக்காக போராடியவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவர்கள் நினைவாக நினைவு மண்டபம், நினைவு தூண் அமைக்க வேண்டும். காங்கிரஸ் சார்பில் அதற்கான செலவுகளை ஏற்க தயாராக உள்ளோம்.
மின்கட்டண உயர்வை மக்கள் தாங்கும் நிலையில் இல்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசின் உதய்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதில் கையெழுத்திடவும் மறுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு உதய் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோடு அதற்கு கையெழுத்துமிட்டனர். இதனால் மாநில உரிமை பறிபோனதோடு எந்தவிதமான கடனும் வாங்க முடியவில்லை.
நீட் தேர்வு, உதய்திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்தது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டதுக்கு முழுக்க முழுக்க அ.தி.மு.க. தான் காரணம்.
கள்ளக்குறிச்சி மாணவியை எங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அப்போது சரியான நடவடிக்கை எடுத்தார்.
பெரிய வன்முறைகள் நடந்த போதும் போலீசார் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை நடத்தாமல் நிலைமையை சரியாக கையாண்டனர்.
இதற்காக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். எது எப்படியோ மாணவிக சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.