தமிழ்நாடு (Tamil Nadu)

ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்- கே.எஸ்.அழகிரி, சிரிவெல்ல பிரசாத் பேச்சு

Published On 2022-12-29 08:20 GMT   |   Update On 2022-12-29 08:20 GMT
  • புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும்.

சென்னை:

ராகுல்காந்தி தற்போது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தற்போது யாத்திரைக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. 150 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக 'அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் 'கையோடு கை கோர்ப்போம்' ஆகிய மாபெரும் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ரஞ்சன்குமார் மாநில நிர்வாகிகள் முருகானந்தம், பலராமன், சிரஞ்சீவி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், செயல் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆலோசனை வழங்கினார்.

ராகுல்காந்தியின் பாத யாத்திரையின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிகாட்டுதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நோட்டீசுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வழங்கி இருந்தது. அவை நிர்வாகிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அந்த வழிகாட்டுதல் நோட்டீசில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வட்டார அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று கூடி அதற்கென்று பொறுப்பாளர்களை நியமித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் நடைபயணமாக சென்று ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் நோக்கங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் 1 மாதம் இந்த நடைபயணங்கள் நடத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட வேண்டும்.

கட்சிக்கொடி ஏற்றி, ராகுல் காந்தி பாதயாத்திரை நினைவு கல்வெட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும். பாத யாத்திரை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடிதத்தை வீடு, வீடாக வினியோகம் செய்ய வேண்டும்.

கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் இதற்கு பார்வையாளர்களாக செயல்பட வேண்டும்.

பா.ஜனதா கட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். இது தொடர்பாக ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பொது மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண காணொலி காட்சிகளை பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகளில் முக்கிய இடங்களில் திரையிட வேண்டும்.

புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும். இந்த பேரணியில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிடுவார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் பிரசார இயக்கம் மாநில அளவில் 2023 ஜனவரி 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான பார்வையாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்படுவார்கள்.

அதேபோல், மாவட்ட அளவில் ஜனவரி 15-ந் தேதியிலிருந்து 30-ந் தேதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

ராகுல்காந்தி தம்மை கடுமையாக வருத்திக் கொண்டு இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை முழுமையாக பயன்படுத்துகிற வகையில் மேற்கண்ட செயல் திட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

இத்தகைய செயல் திட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான ஆதரவை மக்களிடையே திரட்ட முடியும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரி வெல்ல பிரசாத் ஆகியோர் பேசும்போது, "ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்," என்றனர்.

Tags:    

Similar News