தமிழ்நாடு

நடிகர் விஜய் எப்படி நடுநிலையாக செயல்படுவார்- மத்திய மந்திரி எல்.முருகன் கேள்வி

Published On 2024-09-11 04:50 GMT   |   Update On 2024-09-11 04:50 GMT
  • தமிழ்நாட்டில் இந்து பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு நாம் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.
  • முருக பக்தர்கள் மாநாடு என்று ஓட்டுக்காக போலி வேஷம் போட்டு நடத்துகிறார்கள்.

திருப்பூர்:

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் திருப்பூர் ஆலாங்காட்டில் நேற்று இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலகங்காதர திலகர் வெள்ளையரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய போது இந்து மக்களை ஒன்று திரட்ட விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியோடு நடைபெற காரணம் ராம.கோபாலன் தான். இந்து முன்னணி தமிழகத்தில் இந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்து பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்படும் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு நாம் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.

அனைத்து விழாக்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முதலமைச்சர் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்பது தான் ஒவ்வொருவருடைய கேள்வி. முருக பக்தர்கள் மாநாடு என்று ஓட்டுக்காக போலி வேஷம் போட்டு நடத்துகிறார்கள். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நடிகர் விஜய்யும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. எப்படி இவர்கள் நடுநிலையாளர்களாக இருப்பார்கள்.

தமிழகத்தில் இன்று நாம் பார்க்கின்றோம். மக்கள் ஆன்மீகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று. தமிழகத்தில் இன்று ஒவ்வொரு வீதிகளிலும் மக்கள் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்துக்களிடம் எழுச்சி பெருகியுள்ளது.

மத்தியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அவைகளை நிறைவேற்றி வருகிறோம். காஷ்மீரில் ஆர்டிகல் 370ஐ நீக்குவோம் என்று உறுதி அளித்தோம். அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என உறுதி அளித்ததன் படி ராமர் கோவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் ஒரு சூழ்நிலை வரவேண்டும், மாற்றம் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News