பாலாற்றில் தடுப்பணை - ஆந்திர அரசுக்கு துரைமுருகன் கடிதம்
- மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
- மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.
இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.
மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.
உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.
இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.
அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.