சென்னை ஆம்னி பஸ் மீது லாரி மோதல்: கணவன்-மனைவி உள்பட 6 பேர் பலி
- சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சமீப காலமாக விபத்துக்களமாக மாறிவிட்டது.
- கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் தீபா என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவுக்காக தீபாவின் உறவினர்கள் 7 பேர் சென்னைக்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் டிக்கெட் பதிவு செய்தனர். நேற்றிரவு அந்த பஸ்சில் செல்வதற்காக சீர்வரிசை பொருட்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நின்றனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது.
பயணிகளை ஏற்றுவதற்காக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை பஸ்சின் பின்பகுதியில் ஏற்றினர். கிளீனர் உதவியுடன் லக்கேஜ் பெட்டி திறந்து சீர்வரிசை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேந்தமங்கலத்தில் இருந்து ஆத்தூர் தி.மு.க. கவுன்சிலருக்கு எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி பஸ்சின் பின்னால் சீர்வரிசை பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்த இருந்த 7 பேர் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில், பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, (வயது 63) அவரது மகன் ரவிக்குமார் (41) உறவினரான, தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன் (46), சுப்பிரமணி (40) மற்றும் ஆம்னி பஸ்சின் கிளீனர் சேலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (21) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அருகில் நின்ற திருநாவுக்கரசுவின் மனைவி விஜயா(60) மற்றும் பஸ்சில் இருந்த 3 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். வழிலியேயே விஜயா பரிதாபமாக இறந்தார்.
இவரது உறவினர் ஜெயபிரகாஷ் (41) உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக அந்த வழியாக பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பஸ் சாலை நடுவே நின்று பயணிகளை ஏற்றியதும், டாரஸ் லாரி அதிவேகமாக வந்ததுமே விபத்துக்கு காரணம் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
விபத்தில் பலியான திருநாவுக்கரசு பெத்தநாயக்கன் பாளையத்தில் தையல் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரவிக்குமார் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ளார். சுப்பிரமணி லேப் டெக்னீசியனாகவும், செந்தில்வேலன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கிளீனர் தீபன் சக்கரவர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சமீப காலமாக விபத்துக்களமாக மாறிவிட்டது. கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். நேற்று இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை-மகன் பலியாகினர். தொடர் விபத்துகளும், பலியும் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் அன்புச்செழியன், வாழப்பாடி டி.எஸ்.பி., சுவேதா, ஏத்தாப்பூர் செயல் அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த இடத்தையும், எவ்வாறு விபத்து நடந்தது? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியையும் பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.
விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியை சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். விபத்து நடந்ததும் அவர் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார். இதையடுத்து போலீசார் இன்று காலை கார்த்திக்கை கைது செய்தனர். இதனிடையே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவர், அம்மன்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். இவர் ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியதாலேயே இந்த சோகவிபத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.