தமிழ்நாடு

மலர்ந்த இடத்திலேயே கருகிய 'காதல்' - காதலனை உயிருடன் எரித்து காதலியும் தீக்குளிப்பு

Published On 2024-05-10 08:17 GMT   |   Update On 2024-05-10 08:17 GMT
  • யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் ‘பிரண்டு’தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ்.
  • தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை பஸ் நிலையம் முன்பு உடல் முழுவதும் எரியும் நெருப்போடு ஓடிய காதல் ஜோடியை பார்த்து பஸ் பயணிகள் கதிகலங்கி போனார்கள்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேசன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (24). பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

சிதம்பரம் அடுத்த புவனகிரி கச்சபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிந்துஜா (22). மயிலாடுதுறையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆகாஷ் தினமும் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து பூம்புகாருக்கு பஸ்சில் செல்வது வழக்கம். முதலாம் ஆண்டு படிப்பை எந்த இடையூறும் இல்லாமல் முடித்தார் ஆகாஷ்.

2-ம் ஆண்டு படிப்பை தொடர்ந்த போது சிந்துஜா புவனகிரியில் இருந்து பஸ்சில் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் வந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றார்.

அப்போதுதான் அவர்களுக்குள் காதல் குறுக்கிட்டு உள்ளது. நேருக்கு நேர் சந்தித்த இருவருக்குள்ளும் காதல் பத்திக்கிச்சு, அவ்வளவுதான்.

ஆகாஷ் ஆகாயத்தில் பறந்தார். சிந்துஜா காதல் சிந்து பாட தொடங்கினார். இருவரும் தினமும் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் காதல் மொழி பேசிவிட்டுத் தான் கல்லூரிக்கு படிக்க செல்வார்கள்.

இப்படியே இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த காதல் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது.


அப்போது ஒருநாள் சிந்துஜா கண்ட காட்சி அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் 'பிரண்டு'தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ். ஆனால் சிந்துஜாவுக்கு சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அதற்கு காரணம் ஆகாஷின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம்தான். இருவரது நெருக்கத்திலும் ஏற்பட்ட விரிசல் சிந்துஜாவுக்கு சந்தேகத்தை அதிகரித்து வந்தது.

இதனால் 'என்னை ஏமாற்றிவிடாதே' என்று காதலுடன் கெஞ்சி இருக்கிறார். அதை கேட்டதும் 'உன்னை ஏமாற்றுவேனா?' என்று சொல்லி சிந்துஜாவை நம்ப வைத்துள்ளார் ஆகாஷ்.

ஆனால் மறுநாளே அந்த பெண்ணும் ஆகாஷும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜா பார்த்து உள்ளார். அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த சிந்துஜா ஆகாஷை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக பேசி இருக்கிறார்.

அதை கேட்டதும் சிந்துஜாவுக்கு புரிந்துவிட்டது. ஆகாஷுக்கு நம் மீதான காதல் கசிந்துவிட்டது. புதுஆளை பிடித்துவிட்டான் என்று வேதனைபட்டு உள்ளார்.

எனக்கு கிடைக்காத ஆகாஷ் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. என்னை ஏமாற்றிய ஆகாஷ் இன்னொருத்தியுடன் வாழக் கூடாது. அதற்கு என்ன வழி? என்று யோசித்த சிந்துஜா கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கைப்பையில் வைத்து கொண்டு அடிக்கடி இருவரும் அமர்ந்து பேசும் பூம்புகாருக்கு போவோம் என்று அழைத்துள்ளார். ஆகாஷும் சரி என்று பைக்கில் அழைத்து சென்று உள்ளார்.

தனது திட்டத்தை நிறைவேற்ற ஏனோ தருணம் வாய்க்காததால் திரும்பி வந்த போது ஆகாஷிடம் மீண்டும் அந்த பெண்ணை பற்றி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை பஸ் நிலையம் வந்ததும் பைக்கை விட்டு இறங்கிய சிந்துஜா, ஆகாஷ் மீது பெட்ரோலை ஊற்றி மின்னல் வேகத்தில் கொளுத்தி விட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடலில் பற்றி எரிந்த நெருப்போடு காவிரி ஆற்றுக்குள் ஆகாஷ் ஓடி இருக்கிறார். ஆனால் தண்ணீர் இல்லாததால் தரையில் விழுந்து உருண்டு இருக்கிறார்.

சிந்துஜா ரோட்டில் ஓடியதை பார்த்ததும் அருகில் இருந்த கடைக்காரர் போர்வையை தூக்கி போட்டு தீயை அணைத்து உள்ளார்.

காதலர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பஸ் நிலையத்தில் மலர்ந்த காதல் அதே பஸ் நிலையத்தில் கருகியதை பார்த்து சக மாணவ-மாணவிகள் வேதனைப்பட்டார்கள்.

Tags:    

Similar News