மலையம்பாளையம் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
- 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மலையம்பாளையம் அடுத்த எழுமாத்தூர்-பாசூர் ரோடு முத்து கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் 2 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மொளாசி அடுத்த தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (25) என தெரிய வந்தது. 2 பேரும் ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுரேந்திரன், கவியரசன் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.