தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.
இதில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு நிர்வாகிகள் குருசாமி, இளங்கோவன், சரவணன், வசந்தி , விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.