மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து: பொதுமக்கள் உணவு பொருட்களை வழங்கலாம்
- 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.
- தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்களுக்காக மீனாட்சி பஜார் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.
திருக்கல்யாணத்தன்று காலை 7 மணி முதல் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் அனைவருக்கும் கற்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வடை, பச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.
அரிசி, பருப்பு, எண்ணெய், நெய் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களும், பக்தர்களும் வழங்கி வருகின்றனர். எனவே விருந்துக்கு தேவையான பொருட்களை கொடுக்க விரும்புபவர்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கலாம்.
மேற்கண்ட தகவலை பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தெரிவித்துள்ளது.