தமிழ்நாடு

உடைந்த கதவுடன் ஒரு வழிப்பாதையாக ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

Published On 2024-06-13 09:05 GMT   |   Update On 2024-06-13 09:51 GMT
  • அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை:

மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் டி.என்.58-என்.1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்துள்ளது. அந்த கதவுகள் பின்புற வாசலில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையிலேயே இயக்கப்படுகிறது.

இதனால் பின்புற படிக்கட்டை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்த போது வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்பாராதவிதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

ஆனாலும் இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேளைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News