சென்னையில் மழைநீர் தேங்க மெட்ரோ பணிகளே காரணம்- அமைச்சர் கே.என்.நேரு
- கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
- சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிக்கின்றனர். வார்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
தெருநாய் பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். தெருநாய்களுக்கு கருத்தடைசெய்யப்படுவதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ திட்ட பணிகளே காரணம்.
சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். மாடுகள் முதன்முறை பிடிபட்டால் ரூ.5,000, 2-ம் முறை பிடிபட்டால் ரூ.10,000, 3-ம் முறை பிடிபட்டால் ஏலம் விடும்படி சட்டம் கொண்டு வரப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்றார்.