தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.
மதுரை:
உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்.
மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். இதை தடுப்பது தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017-ல் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் எந்த கடையில் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாக மாறுகிறது. எங்கே தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லை.
மதுரை எய்ம்ஸ் பொருத்தவரை தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், கட்டிடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்க உள்ளனர் என்ற போதிலும் செய்தியாளர்கள் இதனை ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.