வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்படாது- அமைச்சர் முத்துசாமி
- திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
- 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.
ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.
இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.