திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் உயர்த்தியதாக விஷம பிரசாரம்: அமைச்சர் சேகர்பாபு பாய்ச்சல்
- திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது.
- திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று திருவண்ணாமலை வந்தார். அவர் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ. வேலு, கலெக்டர் முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள்.
இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.
பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
கார்த்திகை தீபத்தின் போது வி.ஐ.பி. பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்காரம் நடைபெற உள்ளது. கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.
ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள்.
இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது.
அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்.
இந்த ஆண்டு அறுபடை முருகன் கோவில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திமுக ஆட்சியின் மீது விஷம பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.