தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

Published On 2023-10-28 08:01 GMT   |   Update On 2023-10-28 08:01 GMT
  • கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை:

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், படிப்பு நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். சென்னையில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படும்.

இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு தீபாவளிக்காக சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், ஆணையர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,167 சிறப்பு பஸ்களும் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 467 பஸ்கள், மற்ற பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 825 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13 ஆயிரத்து 292 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

வருகிற 9-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக சென்னையில் இருந்து 1,365 சிறப்பு பஸ்களும், 10-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,895 சிறப்பு பஸ்களும், 11-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் என சென்னையில் இருந்து மொத்தம் 10,975 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 9-ந்தேதி 1,100 சிறப்பு பஸ்களும், 10-ந்தேதி 2,710 சிறப்பு பஸ்களும், 11-ந்தேதி 2,110 சிறப்பு பஸ்களும் என 5,920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 3 நாட்களிலும் 16,895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லி பைபாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக வருகிற 13-ந் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,275 சிறப்பு பஸ்களும், 14-ந் தேதி 2,100 பஸ்களுடன் கூடுதலாக 975 சிறப்பு பஸ்களும், 15-ந் தேதி 2,100 பஸ்களும், கூடுதலாக 917 பஸ்களும் என 3 நாட்களும் மொத்தம் 9467 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 13-ந் தேதி 1250 சிறப்பு பஸ்களும், 14-ந் தேதி 1395 சிறப்பு பஸ்களும், 15-ந் தேதி 1180 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3825 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப மட்டும் மொத்தம் 6992 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News