திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் இன்று பேசுகிறார்
- கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக பேச உள்ளார்.
ஆவடி:
தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஆவடியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.
இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்.
இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலர் சண்.பிரகாஷ் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
முன்னதாக, இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் சென்றிருந்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் நிலைப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது நடைபெறும் களஆய்வு விவரங்களையும் கேட்டறிந்தார்.
இது தவிர சிறப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீசுடன் ஆலோசித்தார். இதில் சிறப்பு திட்ட அதிகாரி டாரேஸ் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 912 பேர்களுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல இடங்களில் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன.