6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
- வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.
தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.
வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.
ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.