கரூருக்கு அழைத்து வரப்பட்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள்.
- எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து விட்டதாகவும், இதுபற்றி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் போலீஸ் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர்.
இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர்.
அரசியல் முன் விரோதத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியாகி இருந்த நிலையில் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள். இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. ஒரு மாதமாக அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவரது முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக கரூர் அழைத்து வரப்பட்டார். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.