விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்- முத்தரசன்
- தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
- வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.
வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.