பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவன் பலி
- சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
- ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பம், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (வயது9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சக்தி சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை கடந்த 8-ந்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்தி சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிறுவன் சக்தி சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.