நாகர்கோவிலில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் கொலையில் வாலிபர் கைது
- லிபின் ராஜாவை பழவூர் பகுதியில் கொலை செய்து புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
- கொலை செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஜோஸ் பெவின் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 66).
இவர், குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார். இவரது மகன் லிபின் ராஜா (23) ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி வீட்டில் இருந்த லிபின் ராஜா திடீரென மாயமானார்.
இதுகுறித்து அவரது தந்தை செல்லப்பன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் லிபின் ராஜாவை பழவூர் பகுதியில் கொலை செய்து புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் லிபின் ராஜாவின் உடலை தோண்டி எடுத்தனர். லிபின் ராஜா கொலை வழக்கில் தொடர்புடைய புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எபின் (27), ஸ்டீபன் ராஜ் (26) ஆகிய இருவரும் நாகர்கோவில் கோர்ட்டில் சரணடைந்தனர்.
சரண் அடைந்த இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். லிபின் ராஜாவுக்கும் எபினுக்கும் இடையே சிறு சிறு பிரச்சனை இருந்து வந்ததாகவும் அந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று லிபின் ராஜாவை எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் அழைத்துள்ளனர்.
சம்பவத்தன்று வழுக்கம் பாறை பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் தாக்கி லிபின் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று புதைத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நாகர்கோவில் புது குடியிருப்பு காமராஜர்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்த ஜோஸ் பெவின் (24) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜோஸ் பெவினை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜோஸ் பெவினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோஸ் பெவினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஜோஸ் பெவின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜோஸ் பெவின் ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் கடந்த வாரம் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்.