குன்னூரில் நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் பற்றிய தீ
- மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர்.
- நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் துர்க்கை, விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் இடம்பெற்று இருந்தன.
பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி அங்கு ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதில் மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர். இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
அப்போது மேடையில் சாமி வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது வாயில், மண்எண்ணையை ஊற்றி அதை கையில் வைத்திருந்த பந்தத்தில் ஊதி சாகசம் செய்ய முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முகத்தில் தீப்பற்றியது. இதைபார்த்ததும் அதிர்ச்சியான அங்கிருந்தவர்கள் ஓடி சென்று விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இதில் மாணவிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் மாணவியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவி, அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.