தமிழ்நாடு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் செலுத்த புதிய நடைமுறை

Published On 2022-09-10 11:29 GMT   |   Update On 2022-09-10 11:29 GMT
  • இந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் அதற்கான கல்வி கட்டணத்தை கலந்தாய்வு நடைபெறும் இடத்திலேயே செலுத்தும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
  • தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் வருகிறது.

சென்னை:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவு 7-ந் தேதி வெளியானது. இதை தொடர்ந்து கலந்தாய்விற்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது.

அது முடிந்ததும் தமிழக அரசு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டும் 5050 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவும்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றதோடு மதிப்பெண்களும் குறைவாகவே எடுத்துள்ளனர். இதனால் கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் அதற்கான கல்வி கட்டணத்தை கலந்தாய்வு நடைபெறும் இடத்திலேயே செலுத்தும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் வருகிறது.

கட்டண கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டவுடன் அந்த கல்லூரிக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணத்தையும் உடனே அங்கேயே செலுத்த வேண்டும். இதுவரையில் ஒதுக்கீடு கடிதம் கொண்டு சென்ற பிறகு தனியார் கல்லூரிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்தும் நிலை இருந்தது.

இந்த புதிய நடை முறையில் அனைத்து கட்டணத்தையும் தனியார் கல்லூரிகளுக்கு இணையதளம் வழியாக செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மருத்துவகல்வி அதிகாரிகள் கூறும்போது, தனியார் கல்லூரிகளில் சேரும் மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டண பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அக்கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மாணவர்கள் கலந்தாய்வு கூட்டத்திலேயே செலுத்த வேண்டும். அட்மிஷன் கார்டை மட்டும் கொண்டு கல்லூரியில் கொடுத்து சேர்ந்தால் போதுமானது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு இதனை கொள்கை முடிவாக கொண்டு வர உள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News