தமிழ்நாடு

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- செல்வபெருந்தகை அறிக்கை

Published On 2024-03-08 07:13 GMT   |   Update On 2024-03-08 07:13 GMT
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
  • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தனது 7 சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 2,000 கோடி முதல் ரூபாய் 2200 கோடி வரை மார்ச் 7-ல் இருந்து 11-ந்தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

குறைந்தபட்ச பங்குகளின் விலையாக ரூபாய் 212 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விற்பனைக்கு வழங்கவுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரத்து 830. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 93.5 சதவிகித பங்குகள் இருந்தன. அது தற்போது 79.2 சதவிகித பங்குகளாக குறைந்து வருகின்றன.


கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூபாய் 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூபாய் 30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

என்.எல்.சி நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News