சென்னையில் 2,620 சாலைகளில் 10 ஆயிரம் குழி-பள்ளங்கள்
- மழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்கள் சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் விழுந்து விபத்து ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சாலையில் தோன்றிய பள்ளங்கள் உடனுக்குடன் கான்கிரீட் கலவை, சிமெண்ட் கலவை கற்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒருவருடமாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன.
பருவமழையின் போது சென்னையில் மட்டும் மழை நீர் தேங்காமல் உடனடியாக வடியக்கூடிய வகையில் 1000 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன. மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் பருவமழைக்கு முன் மூடப்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் பணிகள் நிறைவு பெறாததால் மூட முடியவில்லை.
இதற்கிடையில் பருவமழை தொடங்கியதால் சாலைகளில் குழி-பள்ளங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பேருந்து சாலைகள் மட்டுமின்றி சிறிய சாலைகள், தெருக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
2,620 ரோடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. கடந்த மாதம் 20-ந்தேதி முதல் நேற்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்கள் சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் விழுந்து விபத்து ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலையில் தோன்றிய பள்ளங்கள் உடனுக்குடன் கான்கிரீட் கலவை, சிமெண்ட் கலவை கற்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.
இதுவரையில் 9,035 பள்ளங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1070 பள்ளங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. 4,696 குழிகள் ஜல்லி மூலமாகவும், 535 பள்ளங்கள் தார் கலவை மூலமாகவும், 365 குழிகள் ரெடிமேடு தார் கலவை மூலமாகவும் நிரப்பப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
3,436 பள்ளங்கள் கான்கிரீட் கலவை கொண்டு தற்காலிகமாக நிரப்பப்பட்டு உள்ளது. பருவமழை முடிந்தவுடன் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுகிறது. அடுத்த மாதம் வரை மழைக்காலம் இருப்பதால் அதன் பின்னர் கணக்கெடுப்பு நடத்தி சாலைகள் புதிதாக போடப்படும் என்று தெரிவித்தனர்.