தமிழ்நாடு

'தம்பி துபாயா, முதல்ல கூலிங் கிளாஸ் போடுங்க': ஓ.பி.எஸ். பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோட்-சூட் வாலிபர்

Published On 2024-04-08 04:27 GMT   |   Update On 2024-04-08 04:27 GMT
  • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
  • சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

கீழக்கரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆங்காங்கே பிரசாரத்தில் ருசிகரங்களுக்கும், பரபரப்புகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. கலகலவென்று பேசும் வேட்பாளர்கள், கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் வாக்காளர்கள் என சுவாரசியங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஓ.பி.எஸ். பிரசாரத்திலும் நடந்துள்ளது.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், செம்படையார்குளம், கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்சூட் அணிந்தபடி டிப்டாப்பாக பிரசார களத்திற்குள் வந்தார். பின்னர் அவர் நான் துபாயிலிருந்து வருகிறேன் என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து குரல் எழுப்பி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.

அதற்கு ஓபிஎஸ் "தம்பி துபாயா, முதல்ல அந்த கூலிங் கிளாஸ போடுங்க" என அவருடன் சிரித்து கொண்டே பேசினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய, ஓ.பன்னீர்செல்வம் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், இப்பகுதியில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

Tags:    

Similar News