தமிழ்நாடு

மாமல்லபுரம்-காரைக்கால் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடப்பதை காட்டும் வரைபடத்தை காணலாம்.

புயல் உருவாகாமல் போனதற்கு காரணம் இதுதான்...

Published On 2024-11-29 02:02 GMT   |   Update On 2024-11-29 02:02 GMT
  • வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை.
  • டெல்டா பகுதிகளில் கொட்ட வேண்டிய மழை, வட இலங்கை பகுதிகளில் கொட்டி தீர்த்திருக்கிறது.

சென்னை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக உருவாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை.

இப்போது உருவாகிவிடும், அடுத்த சில மணி நேரங்களில் வலுப்பெற்றுவிடும் என்று சொல்லப்பட்டு, பின்னர் அதன் நகர்வின் வேகம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது புயலுக்கு மட்டுமல்ல, மழை முன்னறிவிப்புகளிலும் மாற்றம் இருந்தது. அதாவது, அதிகனமழை வரை டெல்டா மாவட்டங்களில் மழை பொழியும் என கூறப்பட்டு, அதை திரும்ப பெற்ற நிகழ்வும் அரங்கேறியது.

இதற்கான காரணம் என்ன? புயல் உருவாகாமல் போனது ஏன்? எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போனது எப்படி? என்பது பற்றிய கேள்விகளுக்கு வானிலை ஆய்வாளர்களும், ஆய்வு மையமும் விளக்கம் அளித்திருக்கிறது.

அதாவது, கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் சில பகுதிகள் இலங்கையின் நிலப்பரப்பில் ஊடுருவியதால், டெல்டா பகுதிகளில் கொட்ட வேண்டிய மழை, வட இலங்கை பகுதிகளில் கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் அங்கு பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது.

மேலும், அரேபிய உயர் அழுத்தம், பசிபிக் உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை ஆகிய காரணிகளால் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவாகுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த காற்றினால் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக தமிழக கடல் பகுதிகளை நோக்கி தீவிரம் அடையாமல் சற்று வலு இழந்து போனது. அந்த நேரத்தில்தான் மணிக்கு 13 கி.மீ. வேகம் வரை நகர்ந்து வந்த அந்த அமைப்பு, அப்படியே நகராமல் நின்று போனது. இந்த காரணங்களால்தான் புயல் உருவாகவில்லை. எதிர்பார்த்த மழையும் பெய்யாமல் போனது.

Tags:    

Similar News