தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மேலும் ஒரு மனு

Published On 2023-04-18 07:58 GMT   |   Update On 2023-04-18 09:56 GMT
  • அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
  • பொதுக்குழு தீர்மானங்களை திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகும் தொடர்ந்து சட்ட போராட்டங்கள் மூலம் ஓ.பன்னீர்செல்வம் விரட்டி கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கும் தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்களை திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.

கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட இருப்பதால் அ.தி.மு.க. மாற்றங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் கடந்த 2022 முதல் இதே பதிலை தெரிவித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடும்போது பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முடிவெடுக்க ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

ஆனால் 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பெங்களூர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News