தமிழ்நாடு

பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- ராமதாஸ்

Published On 2024-09-20 06:51 GMT   |   Update On 2024-09-20 06:51 GMT
  • பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.

மருத்துவக் கழிவுசென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக் கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும் படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

எனவே, தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News