தமிழ்நாடு

பதவியோகம் வழங்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-05-30 04:56 GMT   |   Update On 2024-05-30 04:56 GMT
  • கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
  • கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

இத்தலத்தில் வழிபட்டால் வேண்டுவோருக்கு வேண்டிய பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருச்சிறுக்குடியில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் திருச்சிறுக்குடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்னும் ஊரில் உள்ள சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரநாதர் கோவிலும் அவர் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில் ராகு-கேது ஒரே உடலில் அமைந்து இருப்பதால் இந்த கோவிலில் ராகு-கேது பரிகாரத்திற்கான பிரசித்தி பெற்றதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் உடன் பதவி வரம் அருளும் திருச்சிறுக்குடி சூட்சமபுரீஸ்வரர் கோவில் மற்றும் ராகு-கேது பரிகாரத்தலமான திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News