நெல்லை டவுனில் நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
- தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.
- வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை வேளாங்கண்ணி நகர் தென்புறம் உள்ள வயல் பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது ஒருவர் சிக்கினார். மற்ற 2 வாலிபர்களும் தப்பியோடினர். பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித்(வயது 19) என்பதும், தப்பியோடியவர்கள் அவரது நண்பர்களான டவுன் கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரி செல்வன் என்ற சல்மான், குற்றாலம் சாலையை சேர்ந்த தவுபிக் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
மேலும் 3 பேரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்க செய்து தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் தான் மேற்கொண்டு விபரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.