விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன்- பாரிவேந்தர் உறுதி
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
- பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.
குளித்தலை:
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது,
நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் எனது பல்கலைக்கழகம் மூலம் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்க்கல்வி எனது சொந்த செலவில் வழங்கி உள்ளேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
இந்நிலையில், இம்முறை நான் உங்களின் பேராதரவோடு தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்றவுடன் 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பில் உயர் மருத்துவம் சிகிச்சை பெறவும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் வரும் ஆண்டுகளில் 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி பெற வழிவகை செய்வேன்.
மேலும் அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரவும், இன்னும் பேருந்து கூடுதல் வசதிகள் செய்து தருவேன். விவசாயிகளின் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பாடுபடுவேன் என பேசினார்.
தொடர்ந்து பாதர்பேட்டை, வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், பச்சபெருமாள்பட்டி, அழகாபுரி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அன்புதுரை, துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சபா ராஜேந்திரன், பாஸ்கர், பார்த்திபன், செந்தில், ராஜ்குமார், தமிழரசி மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.