தமிழ்நாடு (Tamil Nadu)

மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த நிபந்தனை...

Published On 2024-10-15 06:27 GMT   |   Update On 2024-10-15 06:27 GMT
  • பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
  • மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பயணிப்பார்கள். இதற்கு இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.30-ம், கார்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மழையின் போது முட்டளவு வெள்ளம் வாகன நிறுத்துமிடத்தில் தேங்கியது. இதனால் பார்க்கிங் மூடப்பட்டது.

இந்த முறை முன் கூட்டியே நிபந்தனைகளை விதித்துள்ளது. பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதையும் மீறி வாகனங்களை நிறுத்த வரும் பயணிகளிடம் மழையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்பதை தெரிவித்து அதற்கு ஒத்துக்கொண்டால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கும் படியும் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் பதிவு எண், உரிமையாளரின் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த நடைமுறைப்படியே அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

ஏற்கனவே பார்க்கிங்கில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தினாலும் அதில் ஏற்படும் சேதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தங்களுக்கு சாதகமாக நிரந்தர விதியை வகுத்து வைத்துள்ளார்கள்.

மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு பயணிக்கலாம் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள்.

அவர்களிடம் இயற்கையான மழை பீதியை போல் இப்படி ஒரு செயற்கை பீதியையும் ஏற்படுத்துவது ஏன்? என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.

Tags:    

Similar News