தமிழ்நாடு

கூடலூரில் வருமானவரி அதிகாரிகள் சோதனை: காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்

Published On 2024-04-11 07:03 GMT   |   Update On 2024-04-11 07:03 GMT
  • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
  • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News