தமிழ்நாடு

மீண்டும் ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சி வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது- பழனிவேல் தியாகராஜன்

Published On 2024-04-02 07:09 GMT   |   Update On 2024-04-02 07:09 GMT
  • தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
  • இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

மதுரை:

மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.

இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.

ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.

நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News