மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்: மத்திய சுற்றுச்சூழல் குழு 17-ந்தேதி பரிசீலனை
- பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
- பரிசீலனைக்கு பிறகே பேனா சின்னம் அமைக்க கடற்கரை மண்டலம் அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை நினைக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.
மேலும் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. இதனை பார்க்க இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது.
இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
இது தொடர்பாக வருகிற 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு பரிசீலனை செய்கிறது. இதன் பின்னரே பேனா சின்னம் அமைக்க கடற்கரை மண்டலம் அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழுவிடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி பெறவும் அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.