தமிழ்நாடு

குடிநீர் வாரியத்தை கண்டித்து கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் 145-வது வார்டு மக்கள் உண்ணாவிரதம்

Published On 2023-05-31 10:31 GMT   |   Update On 2023-05-31 10:31 GMT
  • சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

சென்னை:

சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் குடிநீர் வாரியம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதே நேரம் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவரும், 145-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் முயற்சியால் ரூ.12 கோடியில் 150 தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க சென்னை குடிநீர் வாரியம் பைப் லைன் பணிகளை முடித்து, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கினால் தான் தார்சாலை அமைக்க முடியும்.

ஆனால் 110 சாலைகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை பலமுறை மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் சந்தித்து விரைவாக குடிநீர் பணிகளை முடித்து பணி முடிப்பு சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.

ஆனாலும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

இதனை அறிந்த சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயகுமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் 45 நாட்களுக்குள் குடிநீர் பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் பாதியில் முடிக்கப்பட்டது.

Tags:    

Similar News