தமிழ்நாடு

பிரதமர் மோடி, நவ. 11-ல் திண்டுக்கல் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-10-27 09:43 GMT   |   Update On 2022-10-27 09:43 GMT
  • ஹெலிகாப்டர் தளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
  • கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பகுதி வரை செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர்.

பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், காந்திகிராம சுகாதார மற்றும் குடும்பநல அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பகுதி வரை செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க உள்ளவர்கள் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News