தமிழ்நாடு (Tamil Nadu)

கோவையை தொடர்ந்து நீலகிரியிலும் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்

Published On 2024-10-17 04:05 GMT   |   Update On 2024-10-17 04:05 GMT
  • ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

ஊட்டி:

கோவை மாநகர காவல்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண் காவலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பர்.

இவர்கள் மாணவிகளுடன் ஒரு தோழியை போன்று பழகுகின்றனர். மாணவிகள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது தோழிகளுடனோ பகிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை இவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவர்களும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இதுவே இந்த திட்டத்தின் நோக்கம்.

கோவையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 16 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தாங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு 2 வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று, போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு, சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

குறிப்பாக உளவியல் ரீதியான பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகள், கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் மாணவிகளுக்கு நடக்கும் இடையூறுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பெண் காவலரிடம் தெரிவிக்கலாம்.

மேலும் போதை பொருட்கள் விற்பனை, கேலி கிண்டல் சம்பவங்கள் தொடர்பாக தங்கள் கல்லூரிக்கு என நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

மாணவிகள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைத்திருப்பதுடன், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் நாட்களில் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து தற்காப்பு குறித்த வகுப்புகளும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக கியூ ஆர் குறியீடுடன் நோட்டீசும் ஒட்டப்பட்டிருக்கும். அதனை மாணவிகள் ஸ்கேன் செய்தும், அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

நீலகிரியில் செயல்படுத்தப்பட உள்ள போலீஸ் அக்கா திட்டத்தை கூடுதல் எஸ்.பி. கண்காணிப்பார். நானும் திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்வேன்.

பள்ளிகளில் பயில கூடிய மாணவிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்.

பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பிற்கு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் பாதுகாப்பிற்கென காவல் உதவி என்ற செயலி உள்ளது. தற்போது இந்த செயலியை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

போக்சோ, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி., சவுந்திரராஜன், புறநகர் டி.எஸ்.பி. நமச்சிவாயம், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள், பெண் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News