தமிழ்நாடு

டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்- இருதரப்பினரும் மோதலை கைவிட முடிவு

Published On 2024-05-25 07:29 GMT   |   Update On 2024-05-25 07:29 GMT
  • சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
  • போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது.

இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினருக்கம் இடையே நிகழும் மோதல் போக்கை சுமூகமாக முடித்துக்கொள்வது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பேருந்தில் போலீசார் டிக்கெட் எடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதால் 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கை கைவிட இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News