தமிழ்நாடு

அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டருடன் போலீஸ்காரர் வாக்குவாதம்- வீடியோ

Published On 2024-05-22 07:59 GMT   |   Update On 2024-05-22 09:34 GMT
  • வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
  • ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று அந்த பஸ் நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். இதனை அடுத்து பஸ் கண்டக்டர் அந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

அப்போது அந்த போலீஸ்காரர் அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.

இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News