ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- பொள்ளாச்சி ஜெயராமன்
- ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
- தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.
திருப்பூர்:
திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.