அம்பத்தூர் பால் பண்ணையில் குவிந்துள்ள 150 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
- கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது.
- பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.
அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த மாதம் 17-ந் தேதி தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவின் பேரில் தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அப்போது ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் அடைத்து பயன்படுத்திய பிளாஸ்டிக் பெட்டிகள், வெண்ணெய்டப்பாக்கள், பால் பாக்கெட்டுகள், சேத மடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஐஸ்கிரீம் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சுமார் 150 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பால் பண்ணை வளாகத்துக்குள் 4 இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.
பால்பண்ணையில் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் மூடிய கழிவு சேகரிப்பு கிடங்கு கிடப்பதாகவும் 5 ஆயிரம் சதுர அடி திறந்தவெளி பரப்பளவில் கழிவுகள் சேமிக்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தரப்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை நவீன முறையில் தினமும் கையாள்வதற்கு பேலிங் போன்ற முறைகளை கடைபிடிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.