தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகுப்பு- நாளை முதல் டோக்கன் விநியோகம்

Published On 2024-01-06 04:35 GMT   |   Update On 2024-01-06 05:43 GMT
  • 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
  • டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

சென்னை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றன. ரேசன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்கப்பணம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்னதாக ரூ.1000 ரொக்கமும், பொங்கல் தொகுப்பும் வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உணவு வழங்கல் பாதுகாப்பு துறையின் மூலம் இதற்காக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கோடியே 20 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள்.

பொங்கல் தொகுப்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காது. பொங்கல் பண்டிகை 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதால் 13-ந்தேதி (சனிக்கிழமைக்குள்) பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால் ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் வழக்கம்போல டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.

ரேசன் கடை ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (7-ந்தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. 3 நாட்களுக்குள் டோக்கன் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் 1000 முதல் 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த நாளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்பதை டோக்கன் மூலம் உறுதி செய்யப்படும்.

அதனால் தேவையில்லாமல் ரேசன் கடைகளுக்கு மக்கள் செல்ல தேவையில்லை. குறிப்பிட்ட நாளில் சென்று நெரிசல் இல்லாமல் கைவிரல் பதிவு செய்து பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் பெறலாம்.

டோக்கன் வினியோகம் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து எல்லா இடங்களிலும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும். 4 நாட்களுக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் வகையில் உணவு வழங்கல் துறை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாளில் ரேசன் கடைகளில் நீண்ட வரிசை எதுவும் இல்லாமல் மக்கள் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. 1967, 1800425 5901 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பரிசு தொகுப்பு முறையாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமின்றி பொங்கல் தொகுப்பினை வழங்கிட வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News