எடப்பாடி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்- ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தகவல்
- எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.
- இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வாரா? என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரான செந்தில்முருகனை வாபஸ் பெற வைத்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான செம்மலை கூறுகையில், ஓ.பி.எஸ் பிரசாரத்துக்கு வருவது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்யணும் என்று கூறி இருக்கிறார்.
இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு இரட்டை இலைக்கு பிரசாரம் செய்ய வருவதா? என்ற வகையில் பேசி இருக்கிறார்.
எங்களை பொறுத்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும். வெற்றி கிடைக்கும். எனவே அதை மனதில் வைத்து தான் நாங்கள் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கூறினோம்.
எங்களை வேண்டா வெறுப்பாக நடத்தினால் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்தால் அவர்களுக்கு தான் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.